ஷூப்மன் கில் ருத்ரதாண்டவம்... முதல் ஒருநாள் போட்டியில் 349 ரன்கள் குவித்தது இந்தியா
- ஷூப்மான் கில் 145 பந்துகளில் 19 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் இரட்டை சதம் விளாசினார்
- நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல், ஹென்றி சிப்லி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷூப்மன் கில், ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். கேப்டன் ரோகித் 34 ரன்களில் வெளியேறினார்.
அதன்பின்னர் ஷூப்மான் கில்லுடன் இணைந்த பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். சூரியகுமார் யாதவ் 31 ரன், ஹர்திக் பாண்ட்யா 28 ரன், வாஷிங்டன் சுந்தர் 12 ரன் சேர்த்தனர். மறுமுனையில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஷூப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். 145 பந்துகளில் 19 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் இந்த இலக்கை அவர் எட்டினார். தொடர்ந்து ஆடிய அவர் 208 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. குல்தீப் யாதவ் 5 ரன்னுடனும், ஷமி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல், ஹென்றி சிப்லே தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.