வெற்றி நெருக்கடியில் இந்தியா: கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துடன் நாளை மோதல்
- இந்திய அணி பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
- நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
கிறிஸ்ட்சர்ச்:
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
3 ஒருநாள் போட்டி தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. ஹேமில்டனில் நடந்த 2-வது போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நாளை (புதன் கிழமை) நடக்கிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்கு உள்ளது. மழையால் ரத்தானாலோ அல்லது தோற்றாலோ இந்தியா ஒருநாள் தொடரை இழந்து விடும். இதனால் இந்திய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டும்.
சூர்யகுமார் யாதவ், சுப் மன்கில், கேப்டன் தவான் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீரர்கள் தேர்வில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் டாம்லாதம், கேப்டன் வில்லியம்சன், பின் ஆலன், கான்வே சவுத்தி, ஹென்றி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.