பிளேஆப் ஆட்டத்தில் 129 ரன்கள் குவிப்பு- சேவாக் சாதனையை முறியடித்த சுப்மன் கில்
- இந்த சீசனில் அதிக ரன் எடுத்த வீரர்களில் முதல் இடத்தில் இருந்த டு பிலிசிசை அவர் முந்தினார்.
- லோகோஷ் ராகுல் 2020-ம் ஆண்டு பெங்களூருக்கு எதிராக 132 ரன்களை குவித்தது முதல் நிலையாக இருக்கிறது.
அகமதாபாத்:
குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் இந்த ஐ.பி.எல். சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
23 வயதான பஞ்சாபை சேர்ந்த அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நேற்று நடந்த 'குவாலிபையர் 2' ஆட்டத்தில் சதம் அடித்தார். சுப்மன் கில் 60 பந்தில் 7 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 129 ரன்கள் குவித்தார்.
இந்த தொடரில் அவர் அடித்த 3-வது செஞ்சூரியாகும். கடந்த 21-ந் தேதி பெங்களூர் அணிக்கு எதிராக 104 ரன்னும் (அவுட் இல்லை), 15-ந் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிராக 101 ரன்னும் அடித்திருந்தார்.
129 ரன் எடுத்ததன் மூலம் 'பிளேஆப் சுற்றின் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரேந்தர் சேவாக் சாதனையை சுப்மன் கில் முறியடித்தார். 2014 ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான 'குவாலிபையர்-2' ஆட்டத்தில் வீரேந்தர் சேவாக் 122 ரன் எடுத்தார். தற்போது சுப்மன் கில் அவரை கடந்தார்.
மேலும் ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிகமான ரன் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். லோகோஷ் ராகுல் 2020-ம் ஆண்டு பெங்களூருக்கு எதிராக 132 ரன்களை குவித்தது முதல் நிலையாக இருக்கிறது.
மேலும் இந்த சீசனில் அதிக ரன் எடுத்த வீரர்களில் முதல் இடத்தில் இருந்த டுபெலிசிசை அவர் முந்தினார். இந்த தொடரில் 851 ரன்களை குவித்து உள்ளார். இந்த சீசனில் 800 ரன்னை எடுத்த முதல் வீரர் சுப்மன் கில் ஆவார்.
சுப்மன் கில் ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி உள்ளனர். விராட் கோலி, டிவில்லியர்ஸ், யுவராஜ்சிங், ரெய்னா, ரிஷப்பண்ட், மைக்கேல் வாகன், வீரேந்தர் சேவாக் உள்ளிட்டோர் பாராட்டி உள்ளனர்.