ஐபிஎல் 2024 தொடர்: கொல்கத்தா அணியில் ஜேசன் ராய்க்கு பதிலாக இங்கிலாந்து அதிரடி வீரர் சேர்ப்பு
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
- கடந்த சீசனில் அந்த அணிக்காக ரூ. 2.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், 9 போட்டிகளில் விளையாடி 218 ரன்களை எடுத்திருந்தார்.
ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அதிரடி வீரர் ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த சீசனில் அந்த அணிக்காக ரூ. 2.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், 9 போட்டிகளில் விளையாடி 218 ரன்களை எடுத்திருந்தார்.
ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஜேசன் ராய் விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தொடரிலிருந்து விலகிய ஜேசன் ராய்க்கு பதிலாக இங்கிலாந்து அதிரடி வீரர் பில் சால்ட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய மதிப்பில் ரூ.1.50 கோடிக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய பில் சால்ட், சரியாக விளையாடாத காரணத்தால் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். அதன்பின் நடந்து முடிந்த வீரர்கள் மினி ஏலத்திலும் அவரை எந்த அணியும் ஏலம் கேட்க முன்வரவில்லை. அதிலும் குறிப்பாக, அவர் ஏலத்தில் எடுக்கப்படாத சில தினங்களுக்கு முன்புதான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடுத்தடுத்து சதங்களை விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பில் சால்ட்டை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் பில் சால்ட் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 21 போட்டிகளில் விளையாடி 2 சதம், 2 அரைசதங்களுடன், 639 ரன்களை எடுத்துள்ளார். மேலும். ஐ.சி.சி. டி20 தரவரிசையில் நம்பர் 2 டி20 பேட்ஸ்மேனாக அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.