ஆர்.சி.பி.-க்கு கோப்பை வாங்கி கொடுப்பீர்களா?- ரசிகரின் கேள்விக்கு தோனியின் பதில்....
- தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரோகித்சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் ஆகியவை அதிகபட்சமாக தலா 5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளனர்.
- ஐ.பி.எல். தொடரை எடுத்துக் கொண்டால் 10 அணிகளுமே பலம் வாய்ந்தவையாகும். சிறந்த வீரர்களை தான் தேர்வு செய்துள்ளனர்.
சென்னை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் நடைபெற்றுள்ளன.
வீராட்கோலியின் ஆர்.சி.பி. (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றது இல்லை. 3 தடவை இறுதிப்போட்டியில் தோற்று 2-வது இடத்தை பிடித்தது.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் ஆகியவை அதிகபட்சமாக தலா 5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 தடவையும், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் ஆகி யவை தலா 1 முறை சாம்பியன் பட்டன் பெற்றுள்ளன.
இந்நிலையில் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல ஆர்.சி.பி. அணிக்கு உதவி செய்ய வேண்டும் என்று டோனியிடம் பெங்களூர் அணியின் ரசிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் ரசிர் இந்த கேள்வியை எழுப்பினார்.
அந்த ரசிகரின் கேள்விக்கு தோனி பதில் அளித்து கூறியதாவது:-
அவர்கள் (ஆர்.சி.பி.) மிகவும் நல்ல அணியாகும். உங்களுக்கு அது தெரியும். ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரை திட்டமிட்ட படி எப்போதுமே சரியாக நடக்காது. ஐ.பி.எல். தொடரை எடுத்துக் கொண்டால் 10 அணிகளுமே பலம் வாய்ந்தவையாகும். சிறந்த வீரர்களை தான் தேர்வு செய்துள்ளனர்.
சில வீரர்கள் காயத்தால் சில போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்படுகிறது. இது வெற்றி வாய்ப்பை பாதிக்கும். நான் ஏற்கனவே கூறியது போல் ஆர்.சி.பி. நல்ல அணிதான்.
எங்கள் அணியிலும் கவலைப்பட நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. எனது அணி குறித்து கவலைப்படவே நேரம் சரியாக இருக்கிறது. வேறு அணிக்கு என்னால் எப்படி உதவ இயலும். நான் ஆர்.சி.பி.க்கு உதவினேன் என்றால் எங்கள் அணி ரசிகர்கள் எவ்வாறு நினைப்பார்கள்.
இவ்வாறு டோனி கூறியுள்ளார்.
ரசிகர் கேள்வி கேட்பதும், டோனி அதற்கு பதில் அளிப்பதுமான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.