சதம் விளாசிய விராட்- குஜராத் அணிக்கு 198 ரன்கள் இலக்கு நிர்ணயம்
- மழையின் காரணமாக பெங்களூரு- குஜாராத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டாஸ் தாமதமாக போடப்பட்டது.
- நூர் அகமது 2 விக்கெட்டும், ஷமி, யாஷ் தயால், ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெறும் 70-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியுள்ளன.
பெங்களூருவில் போட்டி தொடங்கும் நேரத்தில் மழை வெளுத்து வாங்கியதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
குஜராத் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது. இந்த போட்டியில் பெங்களூரு அணி வென்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
ஆனால், மழையால் போட்டி நடைபெறுமா இல்லை ரத்தாகுமா என்ற நிலை எழுந்தது. போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும். பெங்களூரு அணிக்கு ஒரு புள்ளி வழங்கினால் 15 புள்ளிகள் பெறும். மும்பை, ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை வென்றால் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விடும். தோற்கும் பட்சத்தில் பெங்களூரு அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
இந்த சூழலில் மழையின் காரணமாக பெங்களூரு- குஜாராத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டாஸ் 8 மணியளவில் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது.
இதில், விராட் கோலி 61 பந்துகளில் சதம் அடித்து 101 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார். தொடர்ந்து, பிளெஸிஸ் 28 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களும், மேக்ஸ்வெல் 11 ரன்களும் லாம்ரார் ஒரு ரன்னும் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அனுஜ் ரவாட் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நூர் அகமது 2 விக்கெட்டும், ஷமி, யாஷ் தயால், ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது.
இதைதொடர்ந்து, குஜராத் அணி 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.