கிரிக்கெட் (Cricket)

புற்று நோயால் பாதிக்கப்பட்ட அன்ஷுமானுக்கு 1 கோடி உதவி- ஜெய்ஷா அதிரடி உத்தரவு

Published On 2024-07-14 08:07 GMT   |   Update On 2024-07-14 08:07 GMT
  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் தற்சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
  • கபில் தேவ் தம்முடைய பென்சன் தொகையை அனுஸ்மானுக்கு கொடுப்பதாக அறிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் தற்சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்காக அவர் 12 வருடங்களில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமையை கொண்டவர். மேலும் 1990-களின் இறுதியில் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டார்.

அவருடைய வழி காட்டுதலில் சார்ஜாவில் நடைபெற்ற கோகோ-கோலா கோப்பையை இந்தியா வென்றதை மறக்க முடியாது. அத்துடன் ஓய்வுக்கு பின் பிசிசிஐ நிர்வாகத்தில் அவர் முக்கிய பொறுப்பிலும் இருந்தார். தற்போது 71 வயதாகும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வருகிறார். எனவே தமக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்யுமாறு அவருடைய சார்பில் பிசிசி-ஐக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பிசிசிஐ-யிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனையடுத்து முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் தம்முடைய பென்சன் தொகையை தனது நண்பன் மற்றும் சக வீரரான அனுஸ்மானுக்கு கொடுப்பதாக அறிவித்தார். அத்துடன் மற்ற வீரர்களும் அவர்களுடைய குடும்பம் சம்மதித்தால் தங்களது பென்சன் தொகையை மருத்துவ உதவிக்கு கொடுக்கலாம் என கபில் தேவ் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமான் கெய்க்வாடுக்கு நிதியுதவி வழங்க உடனடியாக ரூ.1 கோடியை வழங்க பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உத்தரவிட்டுள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தாரிடம் பேசி நிலைமையை விசாரித்து உதவிகளை வழங்கினார்.

Tags:    

Similar News