கிரிக்கெட்

அவர் இவர் என ஒருவரை சார்ந்திருந்தால்... இந்திய அணிக்கு கபில் தேவின் அட்வைஸ்

Published On 2024-06-27 10:56 GMT   |   Update On 2024-06-27 10:56 GMT
  • ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா அலலது குல்தீப் யாதவ் ஆகியோரை மட்டுமே பற்றி ஏன் பேசுகிறோம்?.
  • விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு. அவர்களுடைய வேலை, தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி இன்று இரவு நடக்கிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பின் உலகக் கோப்பையை வென்றது கிடையாது. இந்த முறை உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணிக்கு முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் கபில் தேவ், ஒரு அணியாக விளையாடினால் மட்டுமே டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கபில் தேவ் கூறியதாவது:-

ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா அலலது குல்தீப் யாதவ் ஆகியோரை மட்டுமே பற்றி ஏன் பேசுகிறோம்?. விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு. அவர்களுடைய வேலை, தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான்.

ஒரு போட்டியை வெல்ல வேண்டும் என்றால், ஒரு நபர் நட்சத்திரமாக ஜொலித்தால் போதும். அவரால் போட்டியை வெற்றி பெற வைக்க முடியும். ஆனால் தொடரை வெல்ல வேண்டுமென்றால் எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும். நீங்கள் பும்ரா அல்லது அர்ஷ்தீப் போன்றோரை சார்ந்து சென்றீர்கள் என்றால், அதன்பின் நீங்கள் தோல்வியை நோக்கி செல்கிறீர்கள்.

நாம் அணியை பற்றி பேசுவோம். இது தனி நபரை விட சிறந்த கண்ணோட்டத்தை கொடுக்கும். முக்கிய வீரர் இருப்பார். நாம் அவரைச் சுற்றி வரலாம். ஆனால், உலகக் கோப்பையை வெல்வதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.

1983 உலகக் கோப்பையை வென்றபோது ரோஜர் பின்னி, மொகிந்தர் அமர்நாத், கீர்த்தி ஆசாத், யாஸ்பால் சர்மா உள்ளிட்ட அனைவரும் மேட்ச் வின்னிங் செயல்பாட்டை வெளிப்படுத்தினர். ஒரு வீரரை சார்ந்து இருக்க தொடங்கினால், கோப்பையை கைப்பற்ற செல்லவில்லை என்று அர்த்தம்.

இவ்வாறு கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News