கிரிக்கெட் (Cricket)

அதே டயலாக்.. டோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த கேதர் ஜாதவ்.. வைரலாகும் பதிவு

Published On 2024-06-03 14:17 GMT   |   Update On 2024-06-03 14:17 GMT
  • ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 2018-ல் தேர்வானார்.
  • மும்பைக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் கடைசி பந்தில் சிக்சர் அடித்து பெற்றுக் கொடுத்த வெற்றியை மறக்க முடியாது.

மகாராஷ்டிராவை சேர்ந்த கேதர் ஜாதவ் கடந்த 2007 முதல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். அந்த வாய்ப்பில் 2013-ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் அபாரமாக விளையாடிய அவர் 1233 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்தார். அதன் காரணமாக 2014-ம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சதமடித்தார். அதை தொடர்ந்து 2018-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக புனே நகரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றதை மறக்க முடியாது.

அந்தப் போட்டியில் 351 ரன்களை சேசிங் செய்த இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கிய போது விராட் கோலியுடன் சேர்ந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் சதமடித்து 120 (76) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார். அதுவே அவருடைய கேரியர் சிறந்த செயல்பாடாகவும் அமைந்தது.

அதே காரணத்தால் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 2018-ல் தேர்வான அவர் மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து பெற்றுக் கொடுத்த வெற்றியை மறக்க முடியாது.

அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தடுமாறிய அவரை இந்தியா மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் கழற்றி விட்டது. அதனால் 39 வயதாகும் அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் 2020-ல் டோனி ஓய்வு அறிவித்த போது சொன்ன வார்த்தைகளை அப்படியே நகலெடுத்து தன்னுடைய ஓய்வையும் அறிவித்துள்ளார். 

இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:-

என்னுடைய கேரியர் முழுவதிலும் அன்பையும் ஆதரவையும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. 1500 மணியிலிருந்து (3 மணி) அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் என்னை ஓய்வு பெற்றுவதாக கருத்தில் கொள்ளுங்கள். என்று பதிவிட்டிருந்தார்.

இதன் மூலம் அவர் டோனி ரசிகன் என்பதை நிரூபித்துள்ளார். விடைபெறும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News