10 விக்கெட்டுகள் வீழ்த்தி பல சாதனைகள் படைத்த நாதன் லயன்
- நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நாதன் லயன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும் 2-வது இன்னிங்சில் 10 விக்கெட்டும் கைப்பற்றினார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் 204 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணிக்கு 370 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 196 ரன்களில் ஆல் அவுட் ஆகி 172 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பல சாதனைகளை படைத்துள்ளார். அவர் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டும் கைப்பற்றி ஆக மொத்தம் 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
நியூசிலாந்தில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 10-வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் லயன் ஆவார். இதை தவிர நியூசிலாந்து மண்ணில் 2006-க்கு பிறகு 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்து வீச்சாளர் இவர் ஆவார்.
மேலும் ஒருசாதனையாக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரரை பின்னுக்கு தள்ளி 7-வது இடத்தை நாதன் லயன் பிடித்துள்ளார். லயன் 521 விக்கெட்டுகளுடன் கர்ட்னி வால்ஷ் 519 விக்கெட்டுகளுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் இந்திய அணி வீரர் அணில் கும்ளே 619 விக்கெட்டுகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் யாரும் தொட முடியாத இடத்தில் இருக்கிறார்.