ரஞ்சிக் கோப்பை - மும்பையை வீழ்த்தி முதல் முறையாக கோப்பை வென்றது மத்திய பிரதேசம்
- மத்திய பிரதேச அணியில் 3 வீரர்கள் சதம் அடித்து முத்திரை பதித்தனர்.
- 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி மத்திய பிரதேசம் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றது.
பெங்களூரு:
பெங்களூரில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை, மத்திய பிரதேச அணிகள் மோதின.
மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்தது. சர்பிராஸ் கான் சதமடித்து 134 ரன் எடுத்தார்.
மத்திய பிரதேசம் சார்பில் கவுரவ் யாதவ் 4 விக்கெட், அகர்வால் 3 விக்கெட், சரன்ஷ்ஜ் ஜெயின் 2 விக்கெட் வீழ்த்தினர்.
அதன்பின், முதல் இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சில் 536 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரஜத் படிதார், யாஷ் துபே 133 ரன்னும், ரஜத் படிதார் 122 ரன்னும், சுபம் சர்மா 116 ரன்னும் குவித்தனர். சரன்ஷ் ஜெயின் 57 ரன்கள் எடுத்தார்.
மும்பை அணி சார்பில் ஷாம்ஸ் முலானி 5 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், மோஹித் அவஸ்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய மும்பை 2வது இன்னிங்சில் 269 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சுவேத் பார்கர் 51 ரன்னும், சர்ப்ராஸ் கான் 45 ரன்னும், பிரித்வி ஷா 44 ரன்னும் எடுத்தனர்.
மத்திய பிரதேசம் சார்பில் குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டும், கவுரவ் யாதவ், சஹானி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேசம் களமிறங்கியது. 29.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் வலுவான மும்பை அணியை வீழ்த்தி முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
மத்திய பிரதேச வீரர் சுபம் சர்மா ஆட்ட நாயகன் விருதும், மும்பையை சேர்ந்த சர்ப்ராஸ் கான் தொடர் நாயகன் விருதும் வென்றனர்.