கிரிக்கெட் (Cricket)

ஸ்டோய்னிசை வம்புக்கு இழுத்த அர்ஜூன் டெண்டுல்கர்- கேலி செய்த நெட்டிசன்கள்

Published On 2024-05-17 18:23 GMT   |   Update On 2024-05-17 18:23 GMT
  • அர்ஜூன் டெண்டுல்கர் 2.2 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 22 ரன்கள் கொடுத்தார்.
  • அதன் பிறகு காயம் காரணமாக வெளியேறிவிட்டார்.

ஐபிஎல் தொடரின் 67-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது.

இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. போட்டியின் 2-வது ஓவரை அவர் தான் வீசினார். இந்த ஓவரில், 2-வது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஸ்டோய்னிஸிற்கு அவுட் கொடுக்கப்பட்டது.

ஆனால், அவர் ரிவ்யூ எடுக்கவே, பந்து ஸ்டெம்பிற்கு மேல் சென்றது தெளிவாக தெரிந்தது. இதன் காரணமாக நடுவர் முடிவு திரும்ப பெறப்பட்டது. இந்த ஓவரின் கடைசி பந்தில் ரன் எடுக்காத போதிலும், அவர் கிரீஸிற்குள்ளாக நின்று கொண்டிருந்தார். அப்போது அர்ஜூன் டெண்டுல்கர் பந்தை அவரை நோக்கி எறிவது போன்று ஆக்ஷன் செய்தார். இதற்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஏதோ கூறியபடி நடந்து வந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சச்சின் மகன் என்பதால் அவருக்கு அபராதம் விதிப்பார்களா என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து கலாய்த்து வருகின்றனர்.

அர்ஜூன் டெண்டுல்கர் 2.2 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 22 ரன்கள் கொடுத்தார். அதன் பிறகு காயம் காரணமாக வெளியேறிவிட்டார். அவரின் 3-வது ஓவரின் முதல் 2 பந்துகளை பூரன் 6 சிக்சர் விளாசினார். இதனால் பயந்து அர்ஜூன் வெளியேறிவிட்டதாகவும் கிண்டலடித்து வருகின்றனர். 

Tags:    

Similar News