ஐ.பி.எல். ஏலத்தில் 15 வயது இளம் வீரர்: ஏலம் எடுக்கப்படுவாரா?
- ஐ.பி.எல். மினி ஏலத்தில் 405 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள்
- 132 வெளிநாட்டு வீரர்கள், 273 இந்திய வீரர்கள் அடங்குவார்கள்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 2023 சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக வீரர்களை விடுவிடுத்தல், அணிகளுக்கு இடையில் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற 23-ந்தேதி மினி ஏலம் நடைபெற இருக்கிறது.
ஏலத்தில் பங்கேற்க பல்வேறு நாட்டு வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். இதில் இருந்து 405 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் 132 வெளிநாட்டு வீரர்களும், 273 இந்திய வீரர்களும் அடங்குவர்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாட மிக அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், ரஹ்மானுல்லா குர்பாஸ் போன்றோர் ஐ.பி.எல். அணிகளால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, மினி ஏலத்தில் பங்கேற்க அந்த நாட்டின் சுழற்பந்து வீச்சாளரான அல்லா முகமது கஜான்ஃபர் தனது பெயரை விண்ணப்பித்திருந்தார். அவரை ஐ.பி.எல். ஏலத்தில் இணைத்துள்ளது நிர்வாகம்.
அவருக்கு 15 வயதுதான் ஆகிறது. 6 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட அல்லா முகமது கஜான்ஃபர் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். அவர் பாக்தியா மாகாணத்தை சேர்ந்தவர்.
தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த அவர், தவ்லாத் அகமது சாய் ஆலோசனையின்படி சுழற்பந்து வீச்சாளராக மாறியுள்ளார். முன்னதாக பிக் பாஷ் லீக்கில் விளையாட விண்ணப்பித்திருந்தார். ஆனால், எந்த அணியும் அவரை ஏலம் எடுக்கவில்லை.
இவருக்கு இந்திய வீரர் அஸ்வினின் பந்து வீச்சு மிகவும் பிடிக்குமாம். அவரது பந்து வீச்சால் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.