கிரிக்கெட் (Cricket)

ஓய்வு முடிவை திரும்பப்பெற்ற முகமது அமீர்

Published On 2024-03-24 17:09 GMT   |   Update On 2024-03-24 17:09 GMT
  • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்.
  • பாகிஸ்தான் அணிக்காக முகமது அமீர் கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமானார்.

2024-ம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 20 அணிகள் இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கிறது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சில பாகிஸ்தான் வீரர்கள் தங்களது ஓய்வுமுடிவை திரும்பப்பெற்று பாகிஸ்தான் அணிக்காக விளையாட ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில் நடைபெற்று முடிந்த பிஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய இமாத் வசிம் தனது ஓய்வு முடிவை திரும்பப்பேற்று உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

அவரைப் தொடர்ந்து நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முகமது அமீரும் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்று டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்.

அதன்பின் அவர் இங்கிலாந்தில் குடியேறி உலகின் பல்வேறு டி20 லீக்குகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அவர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளதால் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமான முகமது அமீர் 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News