கிரிக்கெட் (Cricket)

கம்பீர், நவீன் உல்-ஹக் உடன் நான் சமாதானமானது பலருக்கும் ஏமாற்றம் தான் - விராட் கோலி

Published On 2024-04-11 13:05 GMT   |   Update On 2024-04-11 13:05 GMT
  • கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் மற்றும் பெங்களூரு வீரர் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
  • கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் கோலி இடையில் மோதல் வெடித்தது

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதிய ஆட்டத்தில் லக்னோ வீரர் நவீன் உல்-ஹக் மற்றும் பெங்களூரு வீரர் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போட்டியில் பெங்களூரு வெற்றிபெற்ற பின் இரு அணி வீரர்களும் சந்தித்தபோது லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் கோலி இடையில் மோதல் வெடித்தது.

அதன் பிறகு விராட் கோலி ஆட்டத்தில் தடுமாறும் போதும், பெங்களூரு அணி தோல்வியை தழுவும் போதும் மாம்பழங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து 'இன்பமாய் இருக்குதய்யா' என சொல்வது போல பதிவிட்டு வந்தார் நவீன் உல்-ஹக். அதே நேரத்தில் அந்த சீசன் முழுவதும் அவர் களத்தில் ஃபீல்ட் செய்யும் போது 'கோலி.. கோலி..' என ரசிகர்கள் முழக்கமிட்டு வந்தனர்.

இதனையடுத்து கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான போட்டியில் நவீன் உல் ஹக் பேட் செய்ய வந்த போது 'கோலி.. கோலி..' என ரசிகர்கள் முழக்கமிட்டனர். பின்னர் கோலி பேட் செய்தபோது அவருக்கு நவீன் உல் ஹக் பந்து வீசி இருந்தார். அப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்துக் கொண்டனர். அதோடு இருவரும் அணைத்துக்கொண்டனர்.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்து கொண்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது.

இந்த சம்பவங்கள் குறித்து பேசிய விராட் கோலி, "கம்பீர் பாய் மற்றும் நவீன் உல்ஹக் உடன் நான் சமரசத்தில் ஈடுபட்டது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துவிட்டது. அவர்களுக்கு மசாலா தீர்ந்துவிட்டது என நினைக்கிறேன்" என்று கிண்டலாக தெரிவித்தார். 

Tags:    

Similar News