தொடர் தோல்வியில் பாகிஸ்தான்: 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது
- முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.
- பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஹாமில்டன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பின் ஆலன் 74 ரன்கள் அடித்தார்.
பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இருப்பினும் பாபர் அசாம் - பகார் ஜமான் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் பாபர் ஆசம் 66 ரன்களிலும், பகார் ஜமான் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இருவரும் அவுட்டானதும் பாகிஸ்தான் அணியின் நிலைமை தலைகீழ் ஆனது. மற்ற வீரர்கள் அனைவரும் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஆடம் மில்னே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.