கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தான் அணிக்கு என்னதான் ஆச்சு: தொடர்ச்சியாக 4-வது டி20யிலும் தோல்வி

Published On 2024-01-19 11:45 GMT   |   Update On 2024-01-19 11:45 GMT
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ரிஸ்வான் 90 ரன்கள் எடுத்திருந்தார்.
  • நியூசிலாந்து தரப்பில் மிட்செல் 72 ரன்னிலும் பில்ப்ஸ் 70 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பாகிஸ்தான் அணி 5 டி20 போட்டியில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் முதல் 3 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சைம் அயூப்- ரிஸ்வான் களமிறங்கினர். சைம் அயூப் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த பாபர் அசாம்- ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை மில்னே பிரிந்தார். பாபர் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தது. அடுத்த வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் குவித்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, பெர்குசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு தொடக்கமே தடுமாற்றமாக இருந்தது. 8 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து 20 ரன்களுக்கு முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் ஆலன் 8, டிம் சீஃபர்ட் 0, வில் யங் 4 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இந்த நிலையில் மிட்செல் - பில்ப்ஸ் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து தடுத்தது. இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி சர்வதேச அளவில் தொடர்ச்சியாக 8 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. உலகக் கோப்பை தொடரில் கடைசி லீக் சுற்றில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து நடந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டியிலும் தோல்வியடைந்தது. அதனையடுத்து நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிராக 4 டி20 போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வியை தழுவியுள்ளது.

Tags:    

Similar News