null
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி- தொடரை கைப்பற்றியது
- தனஞ்சய டி சில்வா 98 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
- 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
வெல்லிங்டன்:
நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 580 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. வில்லியம்சன் (215 ரன்) , ஹென்றி நிக்கோல்ஸ் (200 ரன்) ஆகியோர் இரட்டை சதம் அடித்தனர்.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 165 ரன்னில் சுருண்டு பாலோஆன் ஆனது. கேப்டன் கருணாரத்னே அதிகபட்சமாக 89 ரன் எடுத்தார். மேட் ஹென்றி, பிரேஸ்வெல் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.
416 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்து இருந்தது.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. குஷால் மெண்டீஸ் மேலும் ரன் எதுவும் எடுக்காமல் 50 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து மேத்யூஸ் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
5-வது விக்கெட்டான சன்டிமால்-தனஞ்செய டிசில்வா ஜோடி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடியது. சண்டிமால் 62 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு நிஷன் மதுஷ்கா 39 ரன்னில் 'அவுட்' ஆனார்.
மறுமுனையில் இருந்த தனஞ்சய டி சில்வா கடுமையாக போராடினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 98 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அடைந்தார்.
இறுதியில் இலங்கை அணி 358 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி, டிக்னெர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.