கிரிக்கெட் (Cricket)

ரிஷப் பண்ட் பேட்டிங் குறித்து விமர்சித்த அதிரடி வீரர் சேவாக்

Published On 2024-04-04 17:11 GMT   |   Update On 2024-04-04 17:11 GMT
  • நீங்கள் களத்தில் கூடுதலாக 20 பந்துகளை எதிர்கொண்டு, உங்களது சதத்தை பதிவுசெய்திருக்க வேண்டும்.
  • நீங்கள் ஆட்டமிழக்காமல் விளையாடி அடுத்த போட்டிக்கான பயிற்சியையும் இப்போட்டியில் எடுத்திருக்கலாம்.

ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களைச் சேர்த்து. ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த இரண்டாவது அணி எனும் சாதனையை படைத்தது.

இதையடுத்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரிஷப் பண்ட் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அரைசதம் கடந்த நிலையிலும், மற்ற பேட்டர்கள் சொதப்பியதன் காரணமாக அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 166 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி நடப்பு சீசனில் தங்களது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ஆட்டம் இழந்ததற்கு பதிலாக சதமடித்திருக்கலாம் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:-

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இத்தொடரில் அவர் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் பெரிதளவில் சோபிக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

இருப்பினும் நேற்றைய போட்டியில் அவர் அதிரடியாக விளையாடி தனது விக்கெட்டை பரிசளித்துவிட்டதாகவே நான் பார்க்கிறேன். ஏனெனில் எதிரணி நிர்ணயித்த இமாலய இலக்கை நோக்கி விளையாடும் நீங்கள், வெற்றிபெற முடியாது என தெரிந்தும் ஏன் உங்களது விக்கெட்டை இழந்தீர்கள் என்பது புரியவில்லை. ஏனெனில் நீங்கள் களத்தில் கூடுதலாக 20 பந்துகளை எதிர்கொண்டு, உங்களது சதத்தை பதிவுசெய்திருக்க வேண்டும்.

ஏனெனில் இப்போட்டியில் நீங்கள் முடிந்தவரை விக்கெட்டை இழக்காமல் சதமடித்திருந்தால் உங்களது ரன் ரேட்டிற்கு அது மிகப்பெரும் உதவியாக அமைந்திருக்கும். அதேபோல் நீங்கள் ஆட்டமிழக்காமல் விளையாடி அடுத்த போட்டிக்கான பயிற்சியையும் இப்போட்டியில் எடுத்திருக்கலாம். அப்படி நீங்கள் செய்திருந்தால் அடுத்த போட்டியில் நீங்கள் வலைப்பயிற்சியை தவிர்த்து விட்டு நேரடியாக களமிறங்கி இருக்கலாம்.

இவ்வாறு சேவாக் கூறினார்.

Tags:    

Similar News