ஆட்ட நாயகன் விருதை வில்லியம்சனுடன் பகிர்ந்து கொள்ள மாட்டேன்- ரச்சின் ரவீந்திரா
- வில்லியம்சன் 2 இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தினார்.
- வில்லியம்சனுடன் ஆட்டநாயகன் விருதை பகிர்ந்து கொள்வீர்களா? என்று ரச்சின் ரவீந்தராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா இரட்டை சதமும் கனே வில்லியம்சன் சதமும் விளாசினார். இதனை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 162 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
349 ரன்களுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து வில்லியம்சன் சதம் மூலம் 179 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 529 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 247 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இந்த போட்டியில் இரட்டை விளாசிய ரச்சின் ரவீந்திரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் உங்களுக்கு நிகராக இப்போட்டியில் 2 சதங்கள் அடித்த வில்லியம்சனுடன் ஆட்டநாயகன் விருதை பகிர்ந்து கொள்வீர்களா? என்று ரச்சின் ரவீந்தராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நம்முடைய திறனுக்கு தகுந்தாற்போல் அணியின் வெற்றியில் பங்காற்றுவது நல்ல உணர்வை கொடுக்கிறது. நான் இந்த இன்னிங்சை உயரியதாக மதிப்பிடுவேன். ஏனெனில் வெற்றிக்காக நாங்கள் அங்கே கடினமான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினோம்.
ஆட்டநாயகன் விருதை கண்டிப்பாக பகிர மாட்டேன். அவர் 31 சதங்கள் அடித்துள்ளார். எனவே ஒரு சதம் மட்டுமே அடித்துள்ள நான் அதை அவருக்கு கொடுக்கப் போவதில்லை. எந்த நேரத்திலும் அணியின் வெற்றியில் பங்காற்றுவது எப்போதுமே ஸ்பெஷலாகும்.
என்று ரச்சின் கூறினார்.