ராஜ்கோட் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 445 ரன்கள் குவித்து ஆல்அவுட்
- அஸ்வின் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- ஜூரேல் 46 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினர். அறிமுக போட்டியில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார். இதனால் முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. ஜடேஜா 110 ரன்னுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா மேலும் இரண்டு ரன் எடுத்து 112 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் வெளியேறினார்.
8-வது விக்கெட்டுக்கு ஜுரேல் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்திய அணியின் ஸ்கோர் 408 ரன்னாக இருக்கும்போது அஸ்வின் 37 ரன்னில் வெளியேறினார்.
ஜுரேல்
அடுத்து பும்ரா களம் இறங்கினார். அறிமுக வீரர் ஜுரேல் அரைசதம் நோக்கி சென்றார். ஆனால் 46 ரன்கள் எடுத்த நிலையில் ரேஹன் பந்தில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அப்போது இந்திய 415 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி விக்கெட்டுக்கு பும்ரா உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். பும்ரா கிடைத்தது வரை லாபம் என்ற வகையில் அதிரடியாக விளையாடினார். இன்று பந்து நன்றாக அவரது பேட்டில் பட ரன்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதனால் இந்தியா 450 ரன்களை நோக்கி சென்றது. ஆனால் 26 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. சிராஜ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹன் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.