மீசை வைச்சவன் இந்திரன்.. மீசை வைக்காதவன் சந்திரன்.. அஸ்வினை தமிழிழ் வாழ்த்திய ஜடேஜா
- அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
- 1 கோடி ரூபாய் காசோலை ஆகியவை அஸ்வினுக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
சென்னை:
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதில் தர்மசாலாவில் நடந்த கடைசி போட்டியில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14-வது வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார். அப்போட்டியில் 128 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
அதன் வாயிலாக உலகிலேயே தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் என்ற முத்தையா முரளிதரனின் சாதனையை உடைத்து அஸ்வின் புதிய சாதனை படைத்தார். அத்துடன் உலகிலேயே தன்னுடைய அறிமுகப் போட்டியிலும் 100-வது போட்டியிலும் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.
இந்நிலையில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தமிழக வீரராக சாதனை படைத்த அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் 500 சாதனை விக்கெட்டுகளை பிரதிபலிக்கும் வகையில் 500 தங்க நாணயங்கள் கொண்ட சிறப்பு பரிசு, செங்கோல் மற்றும் 1 கோடி ரூபாய் காசோலை ஆகியவை அஸ்வினுக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
மேலும் அந்த நிகழ்ச்சியில் அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டு அஸ்வினை பாராட்டி பேசினார்கள். அதே நிகழ்ச்சியில் அஸ்வினுடைய பவுலிங் பார்ட்னரான ரவீந்திர ஜடேஜா காணொளியில் வந்து வாழ்த்தி பேசினார். அந்த காணொளியில் ரவீந்திர ஜடேஜா பேசியது பின்வருமாறு:-
"ஹாய் ஆஷ் அண்ணா. 100 போட்டிகளில் விளையாடி 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த உங்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கிரிக்கெட்டுக்காக உங்களுடைய பங்கு அபாரமானதாகும். நீங்கள் தொடர்ந்து நிறைய விக்கெட்டுகள் எடுத்து உங்களுடைய மாஸ்டர் மூளையை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நானும் சில விக்கெட்டுகளை எடுத்து உங்களைப்போல் ஒரு ஜாம்பவானாக வர முடியும். நாங்கள் ஒரு பெயரையும் பகிர்ந்து கொண்டுள்ளோம். நான் ரவி இந்திரன். நீங்கள் ரவி சந்திரன். மீசை வைத்தவன் இந்திரன் மீசை வைக்காதவன் சந்திரன்" என்று கலகலப்பாக பேசினார்.
அதாவது தில்லு முல்லு திரைப்படத்தில் மீசை வைத்த கேரக்டரில் வரும் ரஜினிகாந்த் இந்திரனாகவும் மீசை வைக்காத கேரக்டரில் வரும் ரஜினி சந்திரனாகவும் இருப்பார்கள். அதே ஸ்டைலில் மீசை வைக்காத அஸ்வின் சந்திரனாகவும் மீசை வைத்த ஜடேஜா இந்திரனாகவும் இந்திய அணியில் செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருவதாக ரவீந்திர ஜடேஜா வித்தியாசமாக பாராட்டினார். குறிப்பாக அதை ஜடேஜா தமிழில் பேசி அஸ்வினை பாராட்டியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.