கிரிக்கெட் (Cricket)

ரிஷப் பண்ட் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் விபத்து- போலீஸ் டி.ஜி.பி. தகவல்

Published On 2022-12-30 06:54 GMT   |   Update On 2022-12-30 06:54 GMT
  • ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலை காயங்களுக்கு கட்டு போடப்பட்டுள்ளது.
  • ரிஷப்பண்ட், கார் விபத்தில் சிக்கியதை அறிந்ததும் இந்திய வீரர்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப்பண்ட் இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார்.

டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது.

இதில் சாலை தடுப்புகளை உடைத்து கொண்டு கார் சில அடி தூரம் சென்று நின்றது. இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது.

சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது. உடனே ரிஷப் பண்ட் காரில் இருந்து வெளியேற முயற்சித்தார். கார் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்தார். காரில் தீப்பிடித்ததால் முற்றிலும் எரிந்து நாசமானது. காரில் இருந்து ரிஷப்பண்ட் உடனே வெளியேறியதால் காயத்துடன் தப்பினார்.

விபத்து குறித்த தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ரிஷப் பண்டை மீட்டு அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலை காயங்களுக்கு கட்டு போடப்பட்டுள்ளது.

அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. அசோக் குமார் கூறும்போது, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் இன்று அதிகாலை 5.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.

ரூர்க்கி அருகே முகமது பூர் ஜாட் என்ற இடத்தில் விபத்து நடந்துள்ளது. கார் சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்தது. விபத்து தொடர்பாக ரிஷப்பண்ட் போலீசாரிடம் கூறும்போது, 'தான் சிறிது தூக்கக் கலக்கத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

காயம் அடைந்து ரிஷப்பண்ட் டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான 20 ஓவர போட்டி தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. பிப்ரவரியில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு ரிஷப்பண்ட் செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷப்பண்ட், கார் விபத்தில் சிக்கியதை அறிந்ததும் இந்திய வீரர்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். ரிஷப்பண்ட் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News