கிரிக்கெட் (Cricket)
டி20 கிரிக்கெட்டில் ரோகித்-விராட் செய்த சம்பவங்கள்: ஒரு பார்வை
- டி20 உலகக் கோப்பையை 100% வெற்றி பெற்ற முதல் கேப்டன்.
- அதிவேகமாக 3500 ரன்களை கடந்த வீரர் விராட் கோலி.
டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதே போன்று இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலியும் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இருவரின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துயுள்ளது. இந்த நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி படைத்த சாதனைகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
- ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளை விளையாடி உள்ளார். 159 டி20 போட்டிகள். இவருக்கு அடுத்த இடத்தில் பால் ஸ்டிர்லிங் 145 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
- நேற்றைய இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 50 வெற்றிகளை பெற்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
- டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இவர் டி20 போட்டிகளில் 4231 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 4188 ரன்களுடன் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரராக இருக்கிறார்.
- சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை கிளென் மேக்ஸ்வெல்-உடன் ரோகித் சர்மா பகிர்ந்து கொண்டுள்ளார்.
- டி20 உலகக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
- சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 205 சிக்சர்களை விளாசிய ரோகித், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். நவம்பர் 2022 மாதம் விராட் கோலி இந்த மைல்கல்லை எட்டினார்.
- சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை விராட் கோலி பாபர் அசாமுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 39 அரைசதங்களை அடித்துள்ளனர்.
- டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 15 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.
- ஆட்ட நாயகன் போன்றே தொடர் நாயகன் விருதுகளை அதிகம் வென்றவர்கள் பட்டியலிலும் விராட் கோலி தான் முதலிடம் பிடித்துள்ளார். இவரை இதுவரை 7 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.
- சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3500 ரன்களை கடந்த வீரர் விராட் கோலி.