மும்பையை விட தன்னை நன்றாக நடத்தும் வேறு அணிக்கு ரோகித் செல்வார்- அம்பத்தி ராயுடு
- குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்
- நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் தோல்வியை தழுவியுள்ளது
ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் துவங்கும் முன்பே மும்பை அணியின் கேப்டன் மாற்றப்பட்ட சம்பவம் பேசு பொருளாக மாறியது. அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டவரும், மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்தவருமான ரோகித் சர்மா நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் புதிய கேப்டனுடன் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் தோல்வியை தழுவியுள்ளது. மேலும் ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் மற்றும் ரோகித் இடையே கருத்து வேறுபாடு இருக்குமோ என்ற வகையில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின
இதனிடையே ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் அவர் 2025 ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்றும் அவர் பெங்களூரு அணியில் இணையலாம் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "எந்த அணிக்கு செல்ல வேண்டும் என்பது ரோகித் சர்மாவின் விருப்பம். ஐபிஎல் தொடரில் உள்ள எல்லா அணிகளும் அவரை கேப்டனாக ஏற்றுக்கொள்ள விரும்புவார்கள். மும்பை அணியில் தற்போது நடந்தது போல் இல்லாமல் மற்ற அணிகள் ரோகித் சர்மாவை சரியாகக் கையாளும் விதத்தில், அவர் நிச்சயமாக வேறு அணிக்குச் செல்வார் என்று தெரிவித்துள்ளார்.