எங்கள் பீல்டிங் எங்களை வீழ்த்தியது: ருதுராஜ் கெய்க்வாட்
- குஜராத் அணி சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோரின் சதங்களால் 231 ரன்கள் குவித்தது.
- சிஎஸ்கே 196 ரன்கள் அடித்து 35 ரன்னில் தோல்வியை சந்தித்தது.
குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத்தை மீண்டும் ஒரு முறை வீழ்த்தி சிஎஸ்கே பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்யும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் முதலில் விளையாடிய குஜராத் அணி சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோரின் சதங்களால் 231 ரன்கள் குவித்து விட்டது. பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-
எங்கள் பீல்டிங் எங்களை வீழ்த்தியது, நாங்கள் கூடுதலாக 10-15 ரன்களை கொடுத்தோம். திட்டத்தை செயல்படுத்துவதில் நாங்கள் நன்றாக இருந்தோம், ஆனால் அவர்கள் சில நல்ல ஷாட்களை விளையாடினர். பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடி, சிறப்பாக நிலையில் சென்று கொண்டிருக்கும்போது உங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது.
இது மிகவும் விரைவானது (சென்னையில் நடைபெறும் போட்டி குறித்து). நாங்கள் விரைவாக சென்னைக்கு செல்ல வேண்டும். சென்னையில் எங்களுக்கு ஒரு கடினமான ஆட்டம் உள்ளது. அதில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் மாற வேண்டும்.
இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
நாளை சென்னை சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சிஎஸ்கே விளையாட இருக்கிறது. ஒரு நாள் இடைவெளியில் போட்டி இருப்பதால் ருதுராஜ் கெய்க்வாட் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
குஜராத் அணி பேட்டிங் செய்யும்போது சென்னை அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. பல கேட்ச்களை தவறவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.