ஷாகித் அப்ரிடி என்னை கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு மாற்ற முயன்றார் - கனேரியா குற்றச்சாட்டு
- பாகிஸ்தானுக்காக விளையாடிய 2-வது இந்து கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா.
- சுழற்பந்து வீச்சாளரான கனேரியா 15 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.
லாகூர்:
பாகிஸ்தானுக்காக விளையாடிய 2-வது இந்து கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்த கனேரியா, 15 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில், டேனிஷ் கனேரியா தனது சக வீரரான ஷாகித் அப்ரிடி மீது குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
பாகிஸ்தான் அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய 4-வது வீரர் நான் தான். கவுண்டி கிரிக்கெட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டேன். இன்சமாம்-உல்-ஹக், சோயப் அக்தர் போன்ற வீரர்களின் ஆதரவு எனக்கு இருந்தது. ஒரு கேப்டனாக என்னை ஆதரித்த ஒரே நபர் இன்சமாம் தான்.
ஆனால் ஷாகித் அப்ரிடி மற்றும் பிற வீரர்கள் என்னை மிகவும் பாகுபாடோடு நடத்தினார்கள். அவர்கள் என்னுடன் அமர்ந்து உணவு கூட உண்டதில்லை. மதமாற்றம் செய்வது குறித்து என்னிடம் ஷாகித் அப்ரிடி அதிகமாக பேசுவார். என்னை கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு மாற்ற முயன்றார். ஆனால் இன்சமாம் உல் ஹக் அப்படி ஒருபோதும் கூறியதில்லை.
மேலும், கனேரியா தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஷாகித் அப்ரிடி முன்பு பேசியிருந்த வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில், ஷாகித் அப்ரிடியின் மகள் வீட்டிலிருக்கும் டி.வி.க்கு இந்து பூஜையான ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மகள் இந்து பூஜை செய்ததற்காக டி.வி.யை உடைத்ததை குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.