ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தையும் தவற விடுகிறார் சுப்மான் கில்
- ஆஸ்திரேலியா போட்டிக்கு முன்னதாகவே காய்ச்சலால் பாதிப்பு
- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டி சென்னையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தபோது, இந்திய வீரர் சுப்மான் கில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவருக்கு டெங்கு உறுதியானது. இதனால் முதல் போட்டியில் விளையாடவில்லை. நேற்று இந்திய அணி டெல்லி புறப்பட்டு சென்றது. நாளை டெல்லியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியிலும் சுப்மான் கில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்திய வீரர்களுடன் டெல்லி பயணிக்கவில்லை. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சாதகமான ரிசல்ட் வந்து, உடல்நிலை சரியானால் நேரடியாக அகமதாபாத் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப காலமாக தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை சுப்மான் கில் வெளிப்படுத்தி வருகிறார். அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை. சென்னையில் இந்திய அணி 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து திணறியது குறிப்பிடத்தக்கது.
சுப்மான் கில் இல்லாததால் இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறங்கினார்.