விராட் கோலி, ரோகித் சர்மா சாதனையுடன் இணைந்த ஸ்மிரிதி மந்தனா
- இந்திய அணி 11.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பாகிஸ்தானை தோற்கடித்தது.
- இந்திய அணி வீராங்கனை மந்தனா 63 ரன்கள் குவித்தார்.
பர்மிங்காம்:
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது.
இந்த போட்டியின் தொடக்கத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக டாஸ் போடுவது தாமதமானது. மழையின் காரணமாக போட்டியில் இரு ஓவர்கள் குறைக்கப்பட்டு 18 ஓவர்களாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி 18 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 11.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஸ்மிரிதி மந்தனா அரை சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் சேசிங்கில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்குப் பிறகு 1000-க்கும் மேற்பட்ட ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய பேட்டர் என்ற பெருமையை மந்தனா பெற்றுள்ளார். மந்தனா 1059 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். கோலி மற்றும் ரோகித் முறையே 1789 மற்றும் 1375 ரன்கள் குவித்துள்ளனர்.