டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்: ஸ்டீவ் சுமித் சொல்வது என்ன?
- சமீபத்தில் டேவிட் வார்னர் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
- இதனால் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் சுமித் களம் இறங்குகிறார்.
சிட்னி:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் சுமித் களம் இறங்குவார். உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து தொடக்க வீரராக அவர் ஆடுகிறார்.
டேவிட் வார்னர் சமீபத்தில் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக தொடக்க வீரராக யார் களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆஸ்திரேலிய தேர்வு குழு ஸ்டீவ் சுமித் தொடக்க வீரராக ஆடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், டெஸ்ட் அணிக்கு தொடக்க வீரராக விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என ஸ்டீவ் சுமித் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:
லபுசேன் 3-வது வரிசையில் களம் இறங்குவதால் நான் பேட்டிங் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. பேட்டிங் செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.
புதிய பந்தினைச் சந்திப்பது எனக்கு பிடிக்கும். 2019-ம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரின்போது நான் சீக்கிரமாக களம் இறங்கி புதிய பந்தினைச் சந்தித்தேன்.
3-வது வரிசையில் களம் இறங்கி பல ஆண்டுகளாக புதிய பந்துகளில் சிறப்பாக விளையாடி உள்ளேன். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த தொடக்க ஆட்டக்காரர் பொறுப்பு ஒன்றும் புதிதாக இருக்கப் போவதில்லை.
இந்தப் பொறுப்பை மகிழ்ச்சியுடனும், சவாலாகவும் ஏற்றுக்கொண்டு தொடக்க வரிசையில் விளையாடுவேன் என தெரிவித்தார்.