இலங்கை வந்தால்.... ஷாகிப் அல் ஹசனுக்கு மேத்யூஸ் சகோதரர் எச்சரிக்கை
- மேத்யூஸ் குறிப்பிட்ட நேரத்திற்குள் பேட்டிங் செய்ய தயார் ஆகவில்லை டைம்அவுட் முறையில் அவுட்.
- ஷாகிப் அல் ஹசன் திரும்பப் பெற மறுப்பு தெரிவித்ததால், மேத்யூஸ் கடும் விமர்சனம்.
உலகக் கோப்பை தொடரில் வங்காளதேசம்- இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த 6-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. அப்போது இலங்கை வீரர் மேத்யூஸ் பேட்டிங் செய்ய வரும்போது, குறிப்பிட்ட நேரத்திற்குள் பேட்டிங் செய்ய தயாராகவில்லை என நடுவர் "டைம்அவுட்" முறையில் அவுட் கொடுத்தார். இதனால் பந்தை எதிர்கொள்ளாமல் ஆட்டமிழந்தார்.
வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முறையீடு செய்ததால் நடுவர் அவுட் கொடுத்தார். மேத்யூஸ் ஷாகிப் அல் ஹசனிடம் சென்று முடிவை திரும்பப் பெறுமாறு கேட்டார். ஆனால், ஷாகிப் அல் ஹசன் மறுத்துவிட்டார். இதனால் வங்காளதேச அணியின் செயல் அவமானகரமானது என மேத்யூஸ் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் ஷாகிப் அல் ஹசன் இலங்கை வந்தால், அவர் மீது கல்வீசப்படும் என மேத்யூஸ் சகோதரர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேத்யூஸ் சகோதரர் டிரெவிஸ் கூறுகையில் "வங்காளதேச அணியின் சீனியர் ஆல்-ரவுண்டரான ஷாகிப் அல் ஹசனுக்கு இலங்கையில் வரவேற்பு கொடுக்கப்பட மாட்டாது. விளையாடுவதற்காக இலங்கை வந்தால், அவர் மீது கல்வீசப்படும்.
நாங்கள் இதனால் மிகவும் ஏமாற்றம் அடைந்தோம். ஜென்டில்மேன் கேம் என அழைக்கப்படும் கிரிக்கெட்டில், விளையாட்டு வீரர்களுக்கான ஸ்பிரிட் அவரிடம் இல்லை. மேலும், மனிதாபிமானத்தை அவர் காட்டவில்லை. அவர் மற்றும் அவர் அணியிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் சர்வதேச போட்டி அல்லது டி20 லீக் (லங்கா பிரிமீயர் லீக்) போட்டிகளில் விளையாட வந்தால், அவர் மீது கல்வீசப்படும். இல்லாவிடில், ரசிகர்கள் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்றார்.