கிரிக்கெட் (Cricket)

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: சூர்யகுமார் யாதவ் 4-வது வரிசைக்கு பொருத்தமானவர்- ஆர்.பி.சிங்

Published On 2023-07-29 05:43 GMT   |   Update On 2023-07-29 05:43 GMT
  • பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும்போது 4 அல்லது 5-வது வரிசைக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்க முடியும்.
  • அதேவேளையில் அதிக பந்துகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் ஒரு நாள் போட்டி வடிவம் வேறுபட்டது.

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூர்யகுமார் யாதவ், 20 ஓவர் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் ஒரு நாள் போட்டிகளில் ரன் குவிக்க திணறி வருகிறார்.

தற்போது அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஒருநாள் போட்டியில் 4-வது வரிசைக்கு சூர்யகுமார் யாதவ் பொருத்தமானவர் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

வருகிற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யருடன் 4-வது இடத்துக்கு ஒரு நல்ல தேர்வாக இருப்பார். சூர்யகுமார் யாதவ் பொருத்தமாக இருந்தால் அவருக்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும். மேலும் நிச்சயமாக ஒரு நல்ல தேர்வாக இருப்பார்.

அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும்போது 4 அல்லது 5-வது வரிசைக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்க முடியும். 20 ஓவர் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் தற்போதைய ஆட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது.

அதேவேளையில் அதிக பந்துகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் ஒரு நாள் போட்டி வடிவம் வேறுபட்டது. இதனால் சூர்யகுமார் யாதவ் தனது ஆட்ட திட்டத்தை கொஞ்சம் மாற்ற வேண்டும்.

அவருக்கு ஒருநாள் போட்டிகளில் அனுபவம் இல்லாவிட்டாலும் அவரது திறமையை வெளிப்படுத்த போதுமான வாய்ப்புகளை வழங்குவது முக்கியம். வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை நீண்ட கால விருப்ப வீரராக நீங்கள் நினைத்தால் அதற்கேற்ப அவர் மெருகூட்டப்பட வேண்டும். ஒருவரை ஒரு போட்டியில் விளையாட வைத்துவிட்டு இரண்டு போட்டிகளுக்கு வெளியே உட்கார வைக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News