கடைசி ஓவர் வரை போராடிய நேபாளம்.. 21 ரன்களில் வங்காளதேசம் வெற்றி
- 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
- நேபாளம் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்த 37-வது லீக் போட்டியில் வங்காளதேசம் மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங்கை துவங்கிய வங்காளதேசம் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். வங்காளதேசம் சார்பில் யாரும் அதிகபட்சம் 20 ரன்களை கூட அடிக்காத நிலையில், அந்த அணி 19.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நேபாளம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சோம்பால் கமி, திபேந்திர சிங், ரோகித் பௌடெல் மற்றும் சந்தீப் லமிசேன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 107 ரன்களை துரத்திய நேபாளம் அணியும் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
மிடில் ஆர்டரில் நேபாளம் அணியின் குஷல் மல்லா மற்றும் திபேந்திர சிங் விக்கெட்டை கொடுக்காமல் நிதானமாக ரன்களை சேர்த்தனர். இதனால் அந்த அணியின் ஸ்கோர் மெல்ல அதிகரித்தது. இவர்களும் முறையே 27 மற்றும் 25 ரன்களில் ஆட்டமிழக்க, நேபாளம் அணி மீண்டும் விக்கெட்டுகளை இழந்தது.
19.2 ஓவர்களில் நேபாளம் அணி 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் வங்காளதேசம் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேசம் சார்பில் டன்சிம் ஹாசன் 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹாசன் 2 விக்கெட்டுகளையும், டஸ்கின் அகமது 2 விக்கெட் வீழ்த்தினர்.