T20 உலக கோப்பை: பப்புவா நியூகினியாவை வீழ்த்தியது உகாண்டா
- 9-வது லீக் ஆட்டத்தில் சி பிரிவில் உள்ள உகாண்டா-பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.
- 7 விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
கயானா:
9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கயானாவில் இன்று நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் சி பிரிவில் உள்ள உகாண்டா-பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.
டாஸ் வென்ற உகாண்டா கேப்டன் பிரையன் மசாபா பந்து வீச்சை தேர்வு செய்தார். உகாண்டா வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் பப்புவா நியூ கினியா அணி 19.1 ஓவரில் 77 ரன்னில் சுருண்டது.
அல்பேஷ் ராம்ஜானி, காஸ்மாஸ் , ஜூமா மியாகி, பிராங்க் நசுபுகா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.
பின்னர் விளையாடிய உகாண்டா அணி 78 ரன் இலக்கை 7 விக்கெட்டை இழந்து தான் எடுத்தது. அந்த அணி 18.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரியாசத் அலி 33 ரன் எடுத்தார். அலைனோ, நார்மன் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
20 ஓவர் உலக கோப்பையில் உகாண்டாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். அந்த அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் 125 ரன் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.
உகாண்டா 3-வது போட்டியில் வெஸ்ட் இண்டீசை 9-ந் தேதி எதிர்கொள்கிறது.
பப்புவா நியூகினியாவுக்கு தொடர்ந்து 2-வது தோல்வி ஏற்பட்டது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் 5 விக்கெட்டில் தோற்று இருந்தது. 3-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 14-ந் தேதி சந்திக்கிறது.