கிரிக்கெட் (Cricket)

அஷ்வினுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கி பாராட்டிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

Published On 2024-03-16 16:27 GMT   |   Update On 2024-03-16 16:27 GMT
  • தமிழ்நாட்டில் இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார்
  • அனில் கும்ப்ளேவிற்கு பின் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சேப்பாக்கம் மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த அஸ்வினுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அதில், அஷ்வினுக்கு ரூ.1 கோடி பரிசும், தங்க நாணயங்கள் மூலம் 500 என வடிவமைக்கப்பட்ட நினைவுப் பரிசும், செங்கோலும் வழங்கி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கௌரவித்தது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் மூலமாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்தியாவில் இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 14வது வீரர் என்ற பெருமையையும், தமிழ்நாட்டில் இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்தார்.

அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். இதன் மூலமாக அனில் கும்ப்ளேவிற்கு பின் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார்.

அஸ்வினின் இந்த சாதனையை பாராட்டும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவில் ரவிச்சந்திரன் அஸ்வின், அவர் மனைவி பிரீத்தி, இரு மகள்கள் கலந்து கொண்டு பரிசினை பெற்று கொண்டனர்.

இந்நிகழ்வில், ஐசிசி முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன், இந்திய முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.தலைவர் அசோக் சிகாமணி, முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அஸ்வினுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பேசிய அஷ்வின், "2008-ல் ஐ.பி.எல் தொடர் தொடங்கப்பட்டது. பல கோடிகள் முதலீட்டுடன் சென்னை அணி உள்ளே இறங்கியது. அந்த அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது நான் இந்தியா சிமெண்ட்ஸூக்கு எதிரான போட்டி ஒன்றில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தேன்.

அன்று மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்கள், அஷ்வின் சிறப்பாக விளையாடினாய், அஷ்வினை சிஎஸ்கே டீமில் எடுக்கிறோம் தானே, எடுத்துட்டிங்களா என சிஎஸ்கே நிர்வாகி ஒருவரைப் பார்த்து கேட்டுவிட்டார். அங்கிருந்துதான் சென்னை அணியில் என்னுடைய பயணம் தொடங்கியது.

அந்தளவுக்கு முக்கியமான தருணம் அது. 2013-ல் ஒரு தொடரின் போது என்னை அணியிலிருந்து ட்ராப் செய்யும் முடிவில் இருந்தார்கள். டோனிதான் 'அவர் கடந்த தொடரில் சிறப்பாக ஆடியிருக்கிறார் எனக் கூறி எனக்காக இயன்றளவுக்கு ஆதரவு கொடுத்து அணியில் எடுத்தார்.

நாளை நான் உயிரோடு இல்லையென்றாலும் என்னுடைய ஆன்மா இந்த சேப்பாக்கத்தை சுற்றிக்கொண்டேதான் இருக்கும். அந்தளவுக்கு இந்த இடம் எனக்கு முக்கியமானது" என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News