கிரிக்கெட் (Cricket)

இந்திய ஜாம்பவான்கள் சாதிக்காததை சாதித்து காட்டிய தவான்

Published On 2022-07-28 10:27 GMT   |   Update On 2022-07-28 10:27 GMT
  • வெஸ்ட் இண்டீசில் புதிய சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார்.
  • கில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் ஏற்கனவே வெற்றிகளைப் பெற்று தொடரை கைப்பற்றிய இந்தியா இந்த சம்பிரதாய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ஷிகர் தவான் – சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு நிதானமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து 113 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதில் 7 பவுண்டரியுடன் ஷிகர் தவான் 58 (74) ரன்களில் அவுட்டான போது வந்த மழை ஒரு மணி நேரம் பெய்து குறுக்கிட்ட நிலையில் மீண்டும் போட்டி துவங்கிய போது மீண்டும் ஒரு மணிநேரம் கொட்டி தீர்த்து சென்றது. அதனால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டி மீண்டும் தொடங்கிய போது 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கில் – ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மேலும் வலுப்படுத்தினர். அதில் ஸ்ரேயஸ் ஐயர் 44 (34) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 8 (6) ரன்களில் அவுட்டானார். அதனால் 36 ஓவரில் இந்தியா 225/3 ரன்கள் எடுத்தபோது மீண்டும் வந்த மழை முதல் இன்னிங்ஸ் முடியும் நேரம் வரை வெளுத்து வாங்கியது.

அதனால் இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதால் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 98* (98) ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஹெய்டன் வால்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 35 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஆடியது. இந்தியாவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் மூலம் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. கில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாத நிலைமையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்து சாதித்து காட்டியுள்ளது.


அதிலும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து இந்தியா புதிய சாதனையுடன் கோப்பையை வென்றுள்ளது. மேலும் இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. கங்குலி (2002) : 2 -1 (5) 2 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டது.

2. எம்எஸ் டோனி (2009) : 2-1 (4) 1 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

3. சுரேஷ் ரெய்னா (2011) : 3-2 (5)

4. விராட் கோலி (2017) : 3-1 (5) 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

5. விராட் கோலி (2019) : 2-0 (3), 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது

6. ஷிகர் தவான் (2022): 3-0 (3)*

மேலும் கடந்த 2006-க்குப்பின் தொடர்ச்சியாக 12 தொடர்களில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்த இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக தொடர்களில் வென்ற அணி என்ற புதிய உலக சாதனையும் படைத்துள்ளது.

2-வது இடம் : பாகிஸ்தான் – ஜிம்பாப்வேக்கு எதிராக (11)

Tags:    

Similar News