இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் இறுதிப்போட்டி: அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்தனர்
- பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சம பலத்துடன் திகழ்கிறது.
- கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று பிற்பகல் நடக்கிறது. உலக கோப்பையை வெல்வதற்கான பலப்பரீட்சையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு 2-வது உலக கோப்பை டோனி தலைமையில் கிடைத்தது. கபில்தேவ், டோனி வரிசையில் ரோகித் சர்மா 3-வது உலக கோப்பையை பெற்று தரும் வேட்கையில் உள்ளார்.
இந்த போட்டித் தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. தான் விளையாடிய அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. 9 'லீக்' ஆட்டத்திலும் எளிதில் வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் மட்டும் சற்று போராட வேண்டி இருந்தது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சம பலத்துடன் திகழ்கிறது. விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் ஆகியோர் பேட்டிங்கிலும், முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.
இந்திய அணி 2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அதற்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு பதிலடி கொடுக்கும் வேட்கையில் இருக்கிறது.
கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
ஆலன்பார்டர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 1987-ம் ஆண்டு முதல் தடவையாக உலக கோப்பையை கைப்பற்றியது. அதை தொடர்ந்து 1999-ல் ஸ்டீவ் வாக் தலைமையில் 2-வது உலக கோப்பையை வென்றது. ரிக்கி பாண்டிங் தலைமையில் 2003, 2007-ல் உலக கோப்பை கிடைத்தது.
2015-ம் ஆண்டு மைக்கேல் கிளார்க் தலைமையில் ஆஸ்திரேலியா 5-வது உலக கோப்பையை கைப்பற்றியது. ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகியோர் வரிசையில் தன்னை இணைத்துக் கொள்ளும் வேட்கையில் கம்மின்ஸ் உள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் டேவிட் வார்னர், மிச்சேல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித், டிரெவிஸ் ஹெட் ஆகியோரும், பந்து வீச்சில் ஆடம் ஜம்பா, ஸ்டார்க், ஹாசல்வுட் கம்மின்ஸ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இறுதிப் போட்டி நடைபெறும் நரேந்திர மோடி ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும். 1 லட்சத்து 32 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இந்த ஸ்டேடியம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இறுதிப்போட்டியை காணும் உற்சாகத்தில் ரசிகர்கள் நள்ளிரவில் இருந்தே அகமதாபாத் மைதானத்தில் குவிய தொடங்கினர். நாட்டின் பல்வேறு நகரத்தில் இருந்து போட்டியை நேரில் காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் கைகளில் தேசிய கொடியும், இசைக் கருவிகளும் இருந்தன.
டிக்கெட் கிடைக்காதா? என்ற ஏக்கத்திலும் ஏராளமான ரசிகர்கள் மைதானத்தை சுற்றி வலம் வந்தனர்.
இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுக்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விற்பனை ஜோராக இருக்கிறது.
ஒரு டிக்கெட் ரூ.1.87 லட்சத்துக்கு கள்ள மார்க்கெட்டில் விற்பனையானது. ரூ.32 ஆயிரம் விலையிலான டிக்கெட்டுகள் ரூ.1.87 லட்சத்துக்கு விலை போனது.
நாடு முழுவதும் கிரிக்கெட் இறுதிப் போட்டியை டெலிவிசனில் பார்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உலக கோப்பை கிரிக்கெட் ஜூரம் ஒட்டிக் கொண்டுள்ளது.