ஜெய்ஸ்வால்- சுப்மான் கில் ஜோடிக்கு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா புகழாரம்
- முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்தியா அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி
- ஜெய்ஸ்வால்- சுப்மான் கில் ஜோடி 165 ரன்கள் குவித்தது
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது 20 ஓவர் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக் கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 179 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 17 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜெய்ஷ்வால் 51 பந்தில் 84 ரன்னும் (11 பவுண்டரி, 3 சிக்சர்), சுப்மன்கில் 47 பந்தில் 77 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர்.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-
சுப்மான் கில்லும், ஜெய்ஸ்வாலும் மிகவும் அபாரமாக ஆடினார்கள். அவர்கள் வெற்றிகரமாக தங்களது பணியை முடித்தனர். அவர்களது திறமையின் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மைதானத்தில் ஏராளமான இந்திய ரசிகர்கள் திரண்டு வந்து எங்களுக்கு ஆதரவு அளித்தனர்.
20 ஓவர் போட்டியை பொறுத்தவரை யார் வெற்றி பெறுவார்கள்? என்பதை கணிக்க இயலாது. கடைசிப் போட்டியிலும் சிறப்பாக கடுமையாக முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் 2 போட்டிகளில் தோற்ற இந்திய அணி 3-வது மற்றும் 4-வது ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது. டெஸ்ட், ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி 20 ஓவர் தொடரையும் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.