பாகிஸ்தான் சூப்பர் லீக் - ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது லாகூர் குவாலண்டர்ஸ்
- முதலில் ஆடிய லாகூர் அணி 200 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய முல்தான் அணி 199 ரன்கள் எடுத்து தோற்றது.
லாகூர்:
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணியும் லாகூர் குவாலண்டர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லாகூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய லாகூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது. அப்துலா ஷபிக் 40 பந்தில் 65 ரன்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய கேப்டன் ஷஹீன் அப்ரிடி 15 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் முல்தான் சுல்தான்ஸ் அணி களமிறங்கியது. ரூசோவ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். கேப்டன் முகமது ரிஸ்வான் 34 ரன்னும், குஷ்தில் ஷா 25 ரன்னும் எடுத்தனர்.
கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்ட நிலையில் முல்தான் சுல்தான்ஸ் அணி 11 ரன்களை மட்டுமே எடுத்து ஒரு ரன்னில் போராடி தோற்றது.
இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் வென்ற லாகூர் குவாலண்டர்ஸ் அணி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
தொடர் நாயகன் விருது இசானுல்லாவுக்கும், ஆட்ட நாயகன் விருது ஷஹீன் அப்ரிடிக்கும் வழங்கப்பட்டது.