வங்காளதேசத்துடன் நாளை மோதல்: தோல்வி பாதையில் இருந்து பாகிஸ்தான் அணி மீளுமா?
- பாபர் ஆசம் தலைமையலான பாகிஸ்தான்-சகீப் அல் ஹசன் தலைமையிலான வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
- பாகிஸ்தான் அணி தோல்விப் பாதையில் இருந்து மீண்டு வங்காளதேசத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்றோடு ஒவ்வொரு அணியும் தலா 6 ஆட்டங்களில் விளையாடி விடும். புனேயில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
31-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் பாபர் ஆசம் தலைமையலான பாகிஸ்தான்-சகீப் அல் ஹசன் தலைமையிலான வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தான் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் (நெதர்லாந்து, இலங்கை) வெற்றி பெற்றது. அதன் பின்னர் தொடர்ச்சியாக 4 போட்டியில் (இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா) தோற்றது.
பாகிஸ்தான் அணி தோல்விப் பாதையில் இருந்து மீண்டு வங்காளதேசத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காளதேசம் 1 வெற்றி, 5 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் மட்டுமே வங்காளதேசத்தை வீழ்த்தியது. பின்னர் 5 போட்டியில் தொடர்ச்சியாக தோற்றது.
பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் வங்காளதேசம் இருக்கிறது.