ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கக் கூடாது: காரணத்தை விளக்கும் வாசிம் ஜாபர்
- டி29 உலகக் கோப்பையில் ஜெய்ஸ்வால்- ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்பு.
- விராட் கோலி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவரும் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இந்தியா பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணியில் யார் யார் எந்தெந்த இடத்தில் விளையாட வேண்டும் என்பது குறித்து விவாதம் கிளம்பியது.
அதிலும் தொடக்க ஜோடி யார்? என்பதுதான் மிகப்பெரிய விவாதம். இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடினார்.
இதனால் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறக்கப்பட வேண்டும் என விவாதம் நடைபெறுகிறது. இதற்கிடையே ஜெய்ஸ்வால்- ரோகித் சர்மா ஆகியோர்தான் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும் என விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வாசிம் ஜாபர் "விராட் கோலி, ஜெய்ஸ்வால் ஆகியோர்தான் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும். ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரம் நாம் பெறும் தொடக்கத்தை பொறுத்து 3-வது மற்றும் 4-வது இடத்தில் களம் இறங்க வேண்டும். ரோகித் சர்மா சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார். ஆகவே, 4-வது இடத்தில் களம் இறங்குவது கவலை அளிக்கும் விதமாக இருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா தொடக்க சுற்றில் அயர்லாந்து (ஜூன் 5), பாகிஸ்தான் (ஜூன் 9), அமெரிக்கா (ஜூன் 12), கனடா (ஜூன் 15) ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும்.