கிரிக்கெட் (Cricket)
null

பெண்கள் பிரீமியர் லீக்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி சாம்பியன்

Published On 2024-03-18 01:05 GMT   |   Update On 2024-03-18 01:59 GMT
  • ஷோபி டிவைன் 27 பந்தில் 32 ரன்கள் அடித்தார்.
  • எலிஸ் பெர்ரி 37 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிக்காமல் இருந்தார்.

பெண்கள் பிரீமியர் லீக் 2024 சீசனின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 113 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மான அதிகபட்சமாக 27 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீராங்கன மெக் லேனிங் 23 பந்தில் 23 ரன்கள் அடித்தார். இந்த ஜோடி பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் குவித்தது. அதன்பின் 52 ரன்னுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்களூர் அணி சார்பில் சோபி மோலினெக்ஸ் 3 விக்கெட்டும், ஷ்ரேயாங்கா பாட்டில் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா- ஷோபி டிவைன் ஆகியோர் நிதானமாக விளையாடினர். குறைந்த இலக்கு என்பதால் ஆட்டத்தில் வேகம் காட்டவில்லை.

அணியின் ஸ்கோர் 8.1 ஓவரில் 49 ரன்களாக இருக்கும்போது டிவைன் 27 பந்தில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் எலிஸ் பெர்ரி களம் இறங்கினார். இவர் நிதானமாக விளையாடினார். மறுமுனையில் மந்தனா அதிரடி ஆட்டத்தை தொடங்க நினைக்கும்போது 39 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது ஆர்சிபி 15 ஓவரில் 82 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஐந்து ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்டது, எலிஸ் பெர்ரி உடன் ரிச்சா கோஷ் ஜோடி சேர்ந்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீராங்கனைகள் போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றனர்.

ஆர்சிபி வீராங்கனைகள் வாய்ப்பு கிடைக்கும்போது மட்டும் பந்தை பவுண்டரிக்கு விரட்டினர். ஆர்சிபி அணிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளிலும் தலா ஒரு ரன் கிடைத்தது. 3-வது பந்தை ரிச்சா கோஷ் பவுண்டரிக்கு விரட்ட ஆர்சிபி 19.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. எலிஸ் பெர்ரி 37 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிக்காமல் இருந்தார். ரிச்சா கோஷ் 14 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடந்த ஆண்டுதான் பெண்கள் பிரீமியர் லீக் தொடங்கியது. 2-வது சீசனான இதில் ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

Tags:    

Similar News