தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மேக்ஸ்வெல் விளையாடுவார்: கம்மின்ஸ்
- ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்து சாதனை.
- பலமுறை தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடவில்லை.
உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது அரையிறுதி ஆட்டம் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 18.3 ஓவரில் 91 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பின் மேக்ஸ்வெல் தனி ஒருவரால் அணியை வெற்றி பெற வைத்தார்.
விளைாடும்போது அவருக்கு அடிக்கடி தசைப்பிடிப்பு (cramps) ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்தார். இதன்காரணமாக ஆஸ்திரேலியாவின் கடைசி லீக் ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.
இந்த நிலையில், நாளைய அரையிறுதி போட்டி குறித்து கம்மின்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் "மேக்ஸ்வெல் விளையாட தயாராக உள்ளார். நேற்று அவருக்கு சற்று வலி இருந்தது. அவருக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? என தெரிந்து கொள்ள பலமுறை ஸ்கேன் எடுத்தோம். அதிர்ஷ்டவசமாக எல்லாம் சரியாக அமைந்துள்ளது. நாளை டாஸ் சுண்டும்போது ஆடும் லெவன் அறிவிக்கப்படும்" என்றார்.