கிரிக்கெட் (Cricket)

அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தும் முனைப்பில் நியூசிலாந்து: இன்று இலங்கையுடன் பலப்பரீட்சை

Published On 2023-11-09 01:37 GMT   |   Update On 2023-11-09 01:37 GMT
  • நியூசிலாந்து இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ரன்ரேட்டை அதிகரித்து வைப்பது அவசியம்.
  • இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்ததால், நெருக்கடியின்றி விளையாடும்.

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நியூசிலாந்து தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை துவம்சம் செய்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று வீறுநடை போட்டது. இதனால் மீதமுள்ள ஐந்து போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளிலாவது வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் என முக்கியமான அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இதனால் அரையிறுதிக்கு முன்னேறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

தற்போது நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் 8 போட்டிகள் முடிவில் தலா நான்கில் வெற்றி பெற்றுள்ளன. கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று, அதிக ரன்ரேட் வைத்திருந்தால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில்தான் நியூசிலாந்து இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. பெங்களூரு மைதானம் ரன் குவிக்க சாதகமானது. இதனால்தான் கடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து 400 ரன்களுக்கு மேல் குவித்தது. இருந்தபோதிலும், பாகிஸ்தானின் தொடக்க வீரர் பஹர் ஜமான் அதிரடியாக விளையாடி சதம அடிக்க, மழை குறுக்கீட்டால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இன்று சிறப்பாக விளையாடி வெற்றிக்காக முயற்சிக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடியது. இதனால் இன்று மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்லலாம்.

இன்றைய ஆட்டம் முடிந்த பின்னர்தான் பாகிஸ்தான் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து 11-ந்தேதி விளையாட இருக்கிறது. இன்று நியூசிலாந்து வெற்றி பெற்றாலும் கூட, இங்கிலாந்துக்கு எதிராக ரன்ரேட் அடிப்படையில் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்ப உள்ளது. இதனால் நியூசிலாந்து வெற்றி பெறுவதுடன் ரன்ரேட்டை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை அணி 8 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதனால் வெற்றி, தோல்வி அந்த அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. புள்ளிகள் பட்டியலில் எந்த இடம் என்பதை மட்டுமே நிர்ணயிக்கும். இதனால் நெருக்கடி இன்றி இலங்கை வீரர்கள் விளையாடுவார்கள். நியூசிலாந்துக்கு இது முக்கியமான போட்டி என்பதால் வெற்றிக்காக விளையாடுவார்கள். இதனால் அந்த அணியின் ரன் குவிப்பு தொடர வாய்ப்புள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று ரசிகர்கள் ரன் குவிப்பை காணலாம்.

Tags:    

Similar News