கிரிக்கெட் (Cricket)

டபிள்யுபிஎல் 2024 ஏல தேதியை அறிவித்தது பிசிசிஐ

Published On 2023-11-09 08:42 GMT   |   Update On 2023-11-09 08:49 GMT
  • 2023க்கான பரிசுத்தொகை ரூ.10 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது
  • கிரிக்கெட் வீராங்கனைகளை கொண்ட 5 அணிகள் தொடரில் பங்கேற்கின்றன

ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெறும் 20-20 ஐபிஎல் (IPL) தொடரை போல், பெண் கிரிக்கெட் வீராங்கனைகளை கொண்ட அணிகளுடன் டபிள்யுபிஎல் (WPL) எனும் போட்டித்தொடர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கத்தால் (BCCI) இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மும்பை இண்டியன்ஸ், யு.பி. வாரியர், குஜராத் ஜியன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் என 5 அணிகள் இந்த போட்டி தொடரில் பங்கு பெற்றன. முதல் ஏலத்தின் போது ஒவ்வொரு அணிக்கும் ரூ.12 கோடி வழங்கப்பட்டது.

கடந்த மார்ச் 4 முதல் மார்ச் 26 வரை முதல் தொடர் போட்டிகள் நடைபெற்றன. இறுதி போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வென்று மும்பை இண்டியன்ஸ் அணி கோப்பையை தட்டி சென்றது.

2023க்கான பரிசுத்தொகை ரூ.10 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

வரும் 2024 வருடத்திற்கான டபிள்யுபிஎல் போட்டித்தொடருக்கு டிசம்பர் 9 அன்று ஏலம் நடைபெற உள்ளது.

கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் நடைபெறப்போகும் இந்த ஏலத்தில், 5 அணிகளிலும் 30 இடங்கள் போட்டிக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கான 9 இடங்களும் அடங்கும்.

கடந்த முறை ஏலத்தில் கிடைத்த தொகையில் செலவினங்கள் போக மீதம் உள்ள தொகையும், தங்களிடம் உள்ள வீராங்கனைகளை விடுவிப்பதால் கிடைக்கும் தொகையையும் தவிர, இந்த முறை ஒவ்வொரு அணிக்கும் ரூ.1.5 கோடி அதிக வருவாய் கிடைக்கும்.

தற்போதைய சாம்பியன்களான மும்பை இண்டியன்ஸ் அணி தங்களிடம் உள்ள தொகையை முழுவதும் பயன்படுத்தி விட்டது.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டிகள், இந்தியாவில் மும்பை மற்றும் பெங்களூரூ என இரு நகரங்களில் மட்டுமே நடைபெற போகின்றன.

இத்தொடரில் 5 அணிகளும் ஒன்றுடன் ஒன்று இரு முறை போட்டியிடும். முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் "நாக்-அவுட்" சுற்றுக்கு முன்னேறும்.

கடந்த அக்டோபர் மாதம், பி.சி.சி.ஐ. (BCCI), 5 அணிகள் தக்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் வெளியேற்ற விரும்பும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன்படி 60 வீராங்கனைகள் தக்க வைத்து கொள்ளப்பட்டுள்ளனர்; 29 பேர் வெளியேற்றப்பட உள்ளனர்.

ஒவ்வொரு அணியின் வீராங்கனைகளின் இறுதி பட்டியல், ஏலம் நிறைவடைந்ததும் வெளியாகும்.

Tags:    

Similar News