ஆன்மிக களஞ்சியம்

66 கோடி புண்ணிய தீர்த்தங்களின் சங்கமம்!

Published On 2024-08-01 11:46 GMT   |   Update On 2024-08-01 11:46 GMT
  • குருப்பெயர்ச்சி நாட்களில் குடும்பத்துடன் மன மகிழ்வுடன் காவிரி தாய்க்கு மஞ்சள் தூள், புஷ்பம் சமர்ப்பணம் செய்து வணங்கி நீராட வேண்டும்.
  • நீராடும்போது குலதெய்வம், இஷ்டதெய்வம், முன்னோர்களை வணங்கி நீராட வேண்டும்.

காவிரி புஷ்கரம் திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பிரவேசிக்கும் போது நடத்தப்படும் திருவிழா ஆகும்.

12 ராசிகளும் 12 நதிகளுக்கும் உரியது. அவை மேஷம்-கங்கை, ரிஷபம்-நர்மதை, மிதுனம்-சரஸ்வதி, கடகம்-யமுனை, சிம்மம்-கோதாவரி, கன்னி-கிருஷ்ணா, துலாம்-காவிரி, விருச்சிகம்-தாமிரபரணி, தனுசு-சிந்து, மகரம்-துங்கபத்ரா, கும்பம்-பிரம்மபுத்ரா, மீனம்-பரணீதா.

குருப்பெயர்ச்சி நாட்களில் குடும்பத்துடன் மன மகிழ்வுடன் காவிரி தாய்க்கு மஞ்சள் தூள், புஷ்பம் சமர்ப்பணம் செய்து வணங்கி நீராட வேண்டும்.

நீராடும்போது குலதெய்வம், இஷ்டதெய்வம், முன்னோர்களை வணங்கி நீராட வேண்டும்.

மேலும் நமது வீடுகளில் உள்ள பூஜை விக்ரகங்களையும், கோவில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளையும் காவிரிக்கு எடுத்துச் சென்று தீர்த்தவாரி செய்து வருதல் அல்லது காவிரியிலிருந்து தீர்த்தக்கலசம் எடுத்து வந்து மூலருக்கும், உற்சவமூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்வது நல்லது.

இந்தப் புனித நாட்களில் இல்லறத்தார்கள் பித்ருக்களுக்கு காவிரி கரையில் பிண்டம் கொடுப்பது நல்லது. காவிரியில் தீர்த்தம் எடுத்து வந்து வீடுகளில் தெளித்துப் புனிதப்படுத்திக் கொள்ளலாம்.

துவக்க நாளான்று அகில பாரதிய துறவியர்களின் மாபெரும் சங்கமத்துடன் ஒன்று கூடி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி மாநாடாக நடைபெறும்.

நாகை மாவட்ட பூஜாரிகளின் பேரமைப்பு அன்னை காவிரியின் தீர்த்த கலசமெடுத்து மாபெரும் ஊர்வலமாக வருவார்கள்.

13 நாட்களும் யாகங்கள், கோவில் உற்சவமூர்த்திகளின் தீர்த்தவாரி, துறவியர் பெருமக்களின் புனித நீராடல், லலிதா சகஸ்ர நாமம், விஷ்ணு சகஸ்ர நாமம், தேவார, திருவாசக, திருப்புகழ், நாலாயிர திவ்யப்பிரபந்தம், திருவருட்பா பாராயணங்கள் மற்றும் தினந்தோறும் காவிரி ஆரத்தி, மாலை சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

உலகத்தின் நதிகளிலேயே மிகவும் புண்ணியமும் பவித்ரமுமான அன்னை காவிரியின் கரையிலே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் நாம் இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி புனிதம் அடைவோமாக!

அன்னை காவிரியின் மஹா புஷ்கரத்தில் கங்கையும், 66 கோடி புண்ணிய தீர்த்தங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிமார்களும், பதினெண் சித்தர் பெருமக்களும், வாசம் செய்வதால் நாம் நீராடி வழிபாடுகள் செய்து காவிரித்தாய்க்கு மாலை நேரத்தில் ஆரத்தி செய்வதால் நமது பாவங்கள் தீர்ந்து வேண்டுதல்கள் நிறைவேறும்.

Tags:    

Similar News