ஆன்மிக களஞ்சியம்

ஆதிசங்கரர் வாழ்வில் நடந்த நிகழ்வு!

Published On 2024-08-29 11:15 GMT   |   Update On 2024-08-29 11:15 GMT
  • விவேகானந்தர் அத்வைத சாரத்தை ஞான யோகத்தில் மிகவும் ஆழமாகச் சென்று சிறப்பாக விளக்கி இருக்கிறார்.
  • சுஃபியிசம் போன்ற இஸ்லாமிய ஆன்மிகப் பிரிவிலும் நிறைய அத்வைத சிந்தனைகள் உண்டு.

அத்வைத சாரத்தை ஈஸ்வரனே ஆதிசங்கரருக்குப் போதித்ததாய் ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது.

ஆதிசங்கரர் ஒரு சமயம் கங்கையில் குளித்து விட்டு சீடர்களுடன் காசி விஸ்வநாதனைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நான்கு நாய்களைக் கட்டி இழுத்துக் கொண்டு ஒரு புலையன் எதிரில் வழிமறித்தபடி வந்து கொண்டிருந்தான். சடைத்தலையுடனும், அழுக்கு உடைகளுடனும், துர்நாற்றத்துடனும், கோரத் தோற்றத்துடனும் இருந்த அந்தப் புலையன், நாய்களுடன் நெருங்கிய போது ஆதிசங்கரர் அருவருப்புடன் "விலகி நில். எங்களுக்குப் போக வழிவிடு" என்று சொன்னார்.

புலையன் கேட்டான். "யார் விலக வேண்டும்? இந்த உடலைச் சொல்கிறீர்களா?

உடலுக்குள் இருக்கும் என்னைச் சொல்கிறீர்களா? உள்ளே உள்ள உயிர்ப் பொருள் இல்லா விட்டால் இந்த உடல் ஜடத்தன்மை வாயந்ததே.

அது தானாக நகர முடியாதது. உள்ளே உள்ள உயிர்ப்பொருளைச் சொல்கிறீர்கள் என்றால், உங்கள் உடலினுள் உள்ள உயிர்ப் பொருளும், என் உடலின் உள்ளே இருக்கும் உயிர்ப்பொருளும் ஒன்று தான்.

ஒன்றாக இருக்கும் உயிர்ப் பொருள் தன்னையே விட்டு எப்படி விலக முடியும்?"

அந்த வாசகங்களில் இருந்த உண்மை ஆதிசங்கரரை உடனே இருகரம் கூப்பி மண்டியிட்டு அந்தப் புலையனை வணங்க வைத்தது.

"தாங்களே என் குரு. உங்கள் திருவடிகளை வணங்குகிறேன்"

உடனே புலையனின் உருவம் சிவபெருமானாகவும், நாய்கள் நான்கும் அவர் கையில் வேதங்களாகவும் மாறிக் காட்சியளிக்க ஆதிசங்கரர் பரவசத்துடன் "மணீஷ பஞ்சகம்" என்ற அற்புதமான ஐந்து சுலோகங்களில் புலையனாக வந்து இறைவன் சொன்ன அத்வைத தத்துவத்தைப் பாடினார்.

இந்த அத்வைத சாரத்தை உபநிடதங்களிலும், பகவத் கீதையிலும் காண முடிகிறது.

விவேகானந்தர் அத்வைத சாரத்தை ஞான யோகத்தில் மிகவும் ஆழமாகச் சென்று சிறப்பாக விளக்கி இருக்கிறார்.

சுஃபியிசம் போன்ற இஸ்லாமிய ஆன்மிகப் பிரிவிலும் நிறைய அத்வைத சிந்தனைகள் உண்டு.

ரமண மகரிஷி மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றோரும் அத்வைத மார்க்கத்தில் பயணித்தவர்களே.

அஹம் ப்ரம்மாஸ்மி (நான் பிரம்மம்), தத்வமஸி (நீயே அது) என்ற மகாவாக்கியங்கள் அத்வைத ஞானத்தைப் பிரதிபலிப்பவை!

Tags:    

Similar News