ஆன்மிக களஞ்சியம்

சாவடியில் இன்றும் தொடரும் பாபா பட ஊர்வலம்

Published On 2024-09-11 12:30 GMT   |   Update On 2024-09-11 12:30 GMT
  • பாபா படத்தை மலர்களால் அலங்கரித்து, பாபாவை புகழ்ந்து பாடும் பாடல்களை பாடியபடி சென்றனர்.
  • நாளடைவில் வியாழன் தோறும் இந்த பழக்கம் நடைமுறைக்கு வந்தது.

பாபா தூங்கிய வலது பக்க அறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த பகுதியை மிக, மிக புனிதமான இடமாக கருதி பாதுகாத்து வருகிறார்கள்.

ஆண்கள், பெண்கள் தரிசனத்துக்காக தனிதனியே பிரிக்கப்பட்டுள்ள சாவடியில் இரு பாலாரும் வணங்க பாபா படம் வைக்கப்பட்டுள்ளது. பாபாவை வணங்கி முடித்ததும், பலர் அங்கு சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்வதுண்டு.

உங்கள் வேண்டுதல்கள் உடனே நிறைவேற வேண்டுமானால், சாவடியில் இந்த குறிப்பிட்ட இடத்தில் தியானம் இருப்பது நல்லது.

பாபா உயிருடன் இருக்கும் போது, துவாரகமாயில் இருந்து சாவடிக்கு அவரை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக மேள, தாளம் முழங்க அழைத்து செல்வார்கள். சில சமயம் பாபாவை வானவேடிக்கை, பஜனை பாடல்கள் பாடியபடி அழைத்து செல்வார்கள்.

பாபா வளர்த்த சியாம் சுந்தர் எனும் குதிரை அவர் படத்தை முதுகில் சுமந்து செல்லும். அதன் பின்னால் பாபா நடந்து செல்வார். அப்போது பட்டு துணியில் செய்யப்பட்ட பல வண்ண குடையை பாபாவுக்கு பிடித்து வருவார்கள்.

இந்த ஆடம்பரத்தை முதலில் பாபா மிகவும் வெறுத்தார். எவ்வளவோ கண்டித்துப் பார்த்தார். ஆனால் பாபா மீது கொண்ட அபரிதமான பாசம் காரணமாக பக்தர்கள் யாரும் தங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

ஒரு கட்டத்துக்குப் பிறகு பாபாவால் தன் பக்தர்கள் மேற்கொண்ட பட ஊர்வலத்தை நிறுத்த முடியவில்லை. இதன் காரணமாக துவாரகமாயில் இருந்து சாவடிக்கு பாபாவை பக்தர்கள் ஆட்டம், பாட்டத்துடன் அழைத்து செல்வது ஒரு சாம்பிரதாயமாகவே மாறிப்போனது.

பாபா தெய்வமான பிறகும், இந்த பழக்கம் நின்று விடவில்லை. பாபா படத்தை மலர்களால் அலங்கரித்து, பாபாவை புகழ்ந்து பாடும் பாடல்களை பாடியபடி சென்றனர். நாளடைவில் வியாழன் தோறும் இந்த பழக்கம் நடைமுறைக்கு வந்தது.

இப்போதும் சீரடியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாபா படம் அலங்கரிக்கப்பட்டு துவாரகமாயில் இருந்து சாவடிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில் நாடெங்கும் உள்ள சாய்பாபா கோவில்களில் வியாழன் தோறும் பாபா பட ஊர்வலம் நடத்தப்படுகிறது.

Similar News