ஆன்மிக களஞ்சியம்

பாபா உறங்கிய சாவடி

Published On 2024-09-11 12:15 GMT   |   Update On 2024-09-11 12:15 GMT
  • பாபரே சின் சினிகர் என்ற பாபா பக்தர் தன் சொத்துக்களை எல்லாம் சீரடி தலத்துக்காக எழுதி வைத்து விட்டார்.
  • அந்த சொத்து வருவாயில் இருந்து கிடைத்த பணம் மூலம் சாவடியில் பளிங்கு கற்கள் பதித்து அழகுபடுத்தி உள்ளனர்.

துவாரகமாயியை கண் குளிரப் பார்த்து, ஆத்மார்த்தமாக தரிசனம் செய்து முடித்த பிறகு நாம் செல்ல வேண்டிய இடம் சாவடி ஆகும்.

துவாரகமாயியில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் சாவடி இருக்கிறது. இரண்டே நடையில் சாவடிக்கு சென்றடைந்து விடலாம்.

சாவடி என்றால் பொது மக்கள் சந்தித்து கூடி பேசும் இடமாகும். அதாவது ஊர் சங்க கூட்டங்கள் அங்குதான் நடைபெறும்.

மேலும் வழிப் போக்கர்கள் தங்குவதற்கும் அந்த சாவடி பயன்படுத்தப்பட்டது. அந்த சாவடி மிகப் பெரிய கட்டிடம் அல்ல.

ஒரே ஒரு வராண்டா மாதிரியான சிறு அறை கொண்ட இடம்தான்.

துவாரகமாயி மசூதி பழுதடைந்த காரணத்தாலும், மழை நேரத்தில் தண்ணீர் ஒழுகிய காரணத்தாலும், பாபாவை அவரது பக்தர்கள் சாவடியில் வந்து தங்குமாறு கூறினார்கள்.

ஆனால் துவாரகமாயியில் இருந்து வெளியேற பாபாவுக்கு விருப்பம் இல்லை.

எனவே சாவடிக்கு வர மாட்டேன் என்றார். ஆனாலும் பாபா பக்தர்கள் விடவில்லை. பாபாவை வற்புறுத்தி சாவடிக்கு அழைத்து சென்று விட்டனர்.

இதையடுத்து பாபா சாவடியில் இரவில் தங்கி ஓய்வு எடுக்கத் தொடங்கினார். ஒரு நாள் சாவடியிலும், மறு நாள் துவாரகமாயிலும் தூங்கும் பழக்கத்தை பாபா ஏற்படுத்தினார்.

இதன் காரணமாக துவாரகமாயிக்கு கிடைத்த அதே மகிமை, மதிப்பு, மரியாதை எல்லாம் சாவடிக்கும் கிடைத்தது.

சாவடிக்குள் வலது பக்க அறையில் பாபா தூங்கினார். பாபா தெய்வமானதும், சீரடியில் அவர் பாதம் பட்ட இடங்கள் எல்லாம், எப்படி புண்ணிய பூமியாக மாறியதோ, அது போல சாவடியும் புனிதப் பகுதியாக மாறியது.

நாளடைவில் சாவடிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால், அந்த சிறிய இடம் சீரமைத்து சற்று பெரிதாக்கப்பட்டது.

பாபரே சின் சினிகர் என்ற பாபா பக்தர் தன் சொத்துக்களை எல்லாம் சீரடி தலத்துக்காக எழுதி வைத்து விட்டார்.

அந்த சொத்து வருவாயில் இருந்து கிடைத்த பணம் மூலம் சாவடியில் பளிங்கு கற்கள் பதித்து அழகுபடுத்தி உள்ளனர்.

சாவடிக்குள் பாபா பயன்படுத்திய பலகை, நாற்காலி, சக்கர நாற்காலி வைக்கப்பட்டுள்ளன. பாபா தெய்வமானதும், அவரது உடல் கிடத்தப்பட்டிருந்த பலகையும் சாவடியில் இருக்கிறது.

சாவடிக்குள் ஆண்களும் பெண்களும் மொத்தமாக செல்ல முடியாது. சாவடியின் வலது பகுதியில் ஆண்களும் இடது பக்க பகுதியில் பெண்களும் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

Similar News