ஆன்மிக களஞ்சியம்

பாபா உருவாக்கிய அக்னி குண்டம்

Published On 2024-09-13 10:42 GMT   |   Update On 2024-09-13 10:42 GMT
  • இந்த அற்புதச் செயலைக் கண்டு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் வியப்பில் மூழ்கி விட்டனர்.
  • அவர்களுடைய கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. பாபா ஒரு அவதார நாயகர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

சீரடியில் சாய்பாபா வாழ்ந்திருந்த மசூதியின் நடுவில் அமைந்திருக்கும் அக்னி குண்டமே துனி எனப்படுவது. மசூதியின் நடுவில் அக்னி குண்டம் எப்படி வந்தது?

ஒரு நாள் மசூதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்பொழுது பாபாவுக்குப் புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றியது.

ஆனால் அங்கே நெருப்பு இல்லை.

இது தான் தக்க சமயம் என்று எண்ணிய மகல்சாபதி, தாஸ்கணு முதலிய பக்தர்கள், பாபா நெருப்புக்காக தினந்தோறும் அலைய வேண்டியதாக இருக்கிறது.

இங்கேயே எப்பொழுதும் நெருப்பு கிடைக்கும்படி ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்றனர்.

எப்பொழுதும் நெருப்பு என்று கேட்டு விட்டு வியப்படைந்தவர் போல் பாபா தம் இருப்பிடத்திலிருந்து எழுந்து சென்றார்.

மசூதியின் மத்தியில் போய் நின்று தம் கையில் இருந்த குச்சியால் தரையில் தட்டினார். உடனே அந்த இடத்தில் நெருப்பு உண்டாகி எரியத் தொடங்கியது.

இந்த அற்புதச் செயலைக் கண்டு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் வியப்பில் மூழ்கி விட்டனர்.

அவர்களுடைய கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. பாபா ஒரு அவதார நாயகர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

பாபா பக்தர்களை பார்த்து நான் உண்டாக்கிய இந்த நெருப்பு என்றென்றும் அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கும்.

இதிலிருந்து கிடைக்கும் "உதி" (சாம்பல்) துன்பங்களையெல்லாம் போக்கும்.

பிணிகளை நீக்கும் என்று கூறினார். பின் மசூதியில் பணிபுரியும் அப்துல்லாவை அழைத்து இந்த நெருப்பை அணையவிடக்கூடாது.

அவ்வப்பொழுது விறகுக்கட்டைகளைப் போட்டு எரித்து கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

நாள் தோறும் தமக்குப் பக்தர்கள் தட்சணையாக செலுத்தும் தொகையில் தான தர்மங்கள் செய்தது போக மீதி இருக்கும் தொகையில் பாபா அக்னி குண்டத்திற்காக விறகுக்கட்டைகளை வாங்கி விடுவார்.

அக்னி குண்டம் இல்லாத கோவில் எப்படி என் கோவிலாகும் என்று பாபாவே கேட்டதுண்டு.

பாபாவின் "எம் மதமும் சம்மதமே" என்பதை விளக்குவதாய் உள்ளது அக்னி குண்டம். இந்துகளுக்கும், பார்சிகளுக்கும் புனிதமானது அக்னி. கோவிலுக்குச் சென்றால் அக்னி குண்டத்தை வலம் வராத பக்தர்களே இல்லை எனலாம்.

Similar News